ஈழத்து இசை வானில் சாஸ்திரிய சங்கீத மரபையும், தமிழ்த் தேசிய சிந்தனையையும் ஒரே தட்டில் வைத்து இயங்கிய மிகச் சில கலைஞர்களில் ஒருவர் அண்மையில் மறைந்த இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட வர்ண ராமேஸ்வரன் (5 November 1968 – 25 September 2021). அடிப்படையில் வர்ண ராமேஸ்வரனின் பின்புலம் சங்கீதத்தோடு ஒரு சேர வளர்ந்தியங்கியதால் அவருக்கு இயல்பாகவே இசை மீதான வேட்கை அதிகப்பட்டதில் வியப்பில்லை. ஈழத்தமிழர்களின் கலை வரலாற்றில் முக்கிய இடமாக விளங்கும் அளவெட்டி என்ற ஊரின் எல்லையில் உள்ள சிறுவிளான் என்ற சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இன்றும் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், பாரம்பரிய கூத்து, கரகம், காவடி, இசை நாடகக் கலைஞர்களின் ஊற்றுக் கண்ணாக அளவெட்டி மண் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
அவருடைய தந்தையார் கலாபூஷணம், சங்கீத ரத்தினம் முருகேசு வர்ணகுலசிங்கம் ஒரு சிறந்த இசைப்பாரம்பரியத்திலே தோன்றியவர். தந்தையார் வழிப்பேரனார் மற்றும் தாயார்
வழிப்பேரனார் கூட இசை நாடகக் கலைஞர்கள். இப்படியாக வர்ண ராமேஸ்வரனின்
தொட்டிலில் இருந்து சங்கீத ஞானம் புகத் தொடங்கியது.
ஈழத்தில் சங்கீதம் கற்கும் மரபு நெறியின் தொடக்கமான பண்ணிசை வகுப்புகளின் வழியே தான் அவரின் பாலபாடமும் ஆரம்பித்தது. பால்ய வயதிலேயே இசைப் போட்டிகளிலும் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார். அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதயா வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று, மேற்படிப்பைத் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தார்.
வட இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட வாய்ப்பாட்டு, மிருதங்கம் ஆகியவற்றுக்கான பரீட்சைகளில் ஆசிரியர் தரம் வரை தேறி, மிருதங்கக் கலாவித்தகர் என்ற பட்டத்தைப் பெற்றவர். தன் தந்தையார் கற்பிக்கும் இசை நெறிகளோடு தனக்கு வாய்த்த இசை ஆசான்களது நுட்பம் நிறைந்த வழிகாட்டலுமே தன்னைப் புடம் போட்டதாகச் சொல்லிச் கிலாகிப்பார். எடுத்த எடுப்பிலேயே அவர் பாடகர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தவில்லை. மிருதங்கம், Keyboard, ஆர்மோனியம் போன்ற வாத்தியங்களை மீட்டும் வாத்தியக் கலைஞராகவே முதலில் அறியப்பட்டார்.
இன்னொரு பக்கம் தன்னுடைய புலமைத்துவத்தை வளர்த்ததில், 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவிலே இணைந்தவர் நான்கு ஆண்டுகள் இசைக்கலைமணி என்ற பட்டத்தைக் கற்றுத் தேர்ந்து தொடர்ந்து ஐந்தாண்டுகள் இசை விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை மேற்கொண்டு T.M.தியாகராஜன்,
T.V.கோபாலகிருட்டிணன் போன்றோரிடம் இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேறியவர்.
தன் கல்விப் பின்புலத்தைச் செழுமையாகக் கட்டமைத்தவர், இன்னோர் பக்கம் தன் மண்ணையும், மக்களையும் நேசிக்கும் யதார்த்தம் மிகு கலைஞனாகவும் மிளிரத் தொடங்கினார். மெல்லிசைப் பாடல்களை பாடுவது, அவற்றைத் தானே பண் கொண்டு இசையமைப்பது என்பதில் அவருக்கிருந்த தீவிர ஈடுபாடும் இதற்கு உரமூட்டியது எனலாம்.
அளவெட்டி மண்ணில் இருந்து அவர் இடம் பெயர்ந்து வாழ்ந்த இணுவில் மண்ணும் இசை
மரபைக் காத்து வரும் ஊர் என்பதால் அங்கேயும் அவருக்கு ஏதுவான சூழல் எழுந்தது. ஈழத்தின் உச்ச இசை சாகித்தியம் கொண்ட இணுவை வாழ் பிரம்மஶ்ரீ நா.வீரமணி ஐயரின் நட்பும், அரவணைப்பும் கூட வர்ண ராமேஸ்வரனின் முயற்சிகளுக்கு உற்சாகமூட்டித் தொடர வைத்தன.
ஈழத்துப் போராட்ட எழுச்சிப் பாடல்களை ஆரம்பத்தில் தமிழக கலைஞர்கள் மூலம் உருவாக்கிய காலம் கடந்து ஈழத்துக் கலைஞர்களை வைத்தே உருவாக்க வேண்டும் என்ற அக, புறக் காரணிகளுக்குத் தோள் கொடுத்தவர்களில் வர்ண ராமேஸ்வரன் மிக முக்கியமானவர். நெருக்கடி மிகு பொருளாதாரத் தடை, மின்சாரம் இல்லாத அக்காலத்தில் எழுந்த ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் வர்ண ராமேஸ்வரனை விலக்கி வரலாறு எழுத முடியாது. “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!” என்ற மாவீரர் நினைவுப்பாடல் இன்று வரை November 27 இல் மாவீரர்களை நினைவு கூரும் நாளில் எழும் உணர்வுக் குவியல் அந்தப் பாடல். அதுவே அவரின் தொடக்கப் பாடலாய் அமைந்திருந்தாலும், “தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா” பாடலே வர்ண ராமேஸ்வரன் பாடி வெளிவந்த முதலாவது பாடலாக அமைந்தது.
அந்தக் காலத்தை நினைத்துப் பார்த்தால் இப்போதும் நினைவுகள் பூக்கும் ஒரு வரலாறு. கடும் போர்ச் சூழலில், கனத்த இருள் போர்வையில் சைக்கிள் டைனமோ சுழற்றி “அப்புஹாமி பெற்றெடுத்த லொகு பண்டாமல்லி” என்ற மற்றுமொரு பிரபலமான வர்ண ராமேஸ்வரனின் பாடலை கொண்டாடியது இன்றும் இனிமையாக உள்ளது.
அடிப்படையில் சாஸ்திரிய இசைக் கலைஞராக அமைந்தவர் ஒரு பன்முகப் பாடகராக மிளிர்ந்தார் என்பதற்குச் சாட்சியாக, “தாயக மண்ணின் காற்றே” கொடுக்கும் மெல்லிசை
உணர்வும்,“அப்புஹாமி பெற்றெடுத்த லொகுபண்டா மல்லி” தரும் துள்ளிசை உணர்வும் சான்று பகரும். இன்னொரு புறம் பக்தி நெறி இலக்கியமாகவும், அதேவேளை போரால் துன்பப்படும் மக்களின் துயரப்பாடுகளின் வெளிப்பாடாகவும் அமைந்தவை “நல்லை முருகன் பாடல்கள். இதன் வழியாக வர்ண ராமேஸ்வரனின் வீச்சு இன்னொரு திசையைக் காட்டியது. இன்று வரை நல்லூர்க் கந்தன் ஆலய மகோற்சவ காலங்களில் புலம்பெயர் வானொலிகள் கொடுக்கும் படையலாகவும் “நல்லை முருகன் பாடல்கள்” திகழ்கின்றன.
“நல்லை முருகன் பாடல்கள்” உருவான பின்னணியை எனது வானொலி பேட்டியின் போது வர்ண ராமேஸ்வரம் நினைவு கூர்ந்தார். நல்லூர்க் கந்தன் மகோற்சவ காலத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரையும், நானும், வேறு சில நண்பர்களும் நல்லூரின் வீதியிலே திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு அருகாமையிலே, மனோன்மணி அம்மன் கோயிலுக்கு முன்பாக அமர்ந்தோம். இசை விழாவில் பாடும் பாடல்கள் ஒலிபெருக்கியில் கேட்கும். அந்த நேரத்தில் புதுவை அண்ணா மிகுந்த ஆதங்கத்தோடு சொன்னார் ' எடேய் இஞ்ச பார்ரா, இஞ்சை வந்து குண்டு விழுகுது, ஷெல் விழுகுது, இவங்கள் ஒருத்தருக்கும் இதைப் பற்றி ஒரு அக்கறையும் இல்லை. இருந்து தெலுங்கிலை பாடிக்கொண்டிருக் கின்றாங்கள். உதெல்லாம் ஆருக்கு விளங்கும்? உதுகளும் இருந்து தலையாட்டிக் கொண்டிருக்குதுகள்’ அந்த இசை விழாவில் நானும் பாடுவதாக இருந்தது. அதனால்
நான் அவரிடம் சொன்னேன்’;புதுவை அண்ணா! நாங்கள் இதை வித்தியாசமாகச் செய்வோம் நீங்களே எழுதுங்களேன் அண்ணை, நாங்கள் அவற்றை பாடுவோம்’ என்று அவரிடம் கூறினேன்.எங்கள் இசைக் கலைஞர்களிடம் கேட்டபோது ‘இல்லையில்லை சங்கீதம் என்றால் இப்படித்தான்பாடவேணும், நினைத்த மாதிரியெல்லாம் செய்யமுடியாது’ என்றார்கள். அதனால் நாங்கள் அதைஒரு சவாலாக எடுத்து புதுவை அண்ணா பாடல்கள் எழுத நான் மெட்டமைத்து எனது கச்சேரியில்பாடினேன்.பின்னர் எங்கள் ஆசிரியர் N.V.N நவரட்ணம் கூட அந்தப் பாடல்களை பாடினார். அதன் பின்னர் அதே இசைவிழாவின் இறுதி நாளின் பொன்.சுந்தரலிங்கம் கூட சில பாடல்களை பாடியிருந்தார்.
அதன் பின் புதுவை இரத்தினதுரையின் ‘நினைவழியா நாட்கள்’ நூலின் வெளியீட்டு விழாவில் இந்தப் பாடல்கள் பன்னிரண்டைச் சேர்த்து N.V.N.நவரட்ணம் ஆசிரியருடன் நானும் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியிருந்தோம்.
அதன் பின்னர் தான் இந்தப் பாடல்களை ஒரு ஒலித்தட்டாக வெளியிட எண்ணி இசைவாணர்
கண்ணனை அணுகினோம். அவர் ஏற்கனவே மெட்டமைக்கப்பட்ட பாடல்களுக்கு இடையிசை, முன்னிசை எல்லாம் இணைத்து ஒரு ஒலித்தட்டாக உருவாக்கினார். ஆனால் நாங்கள் அந்த ஒலித்தட்டை உருவாக்கும் போது இந்தப் பாடல்கள் வெளிநாடுகளுக்கும் பரவி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்து செய்யவில்லை.
இதன் தொடராகவே’திசையெங்கும் இசை வெள்ளம்’ என்னும் இசைத் தட்டும் உருவானது. அது ஈழத்தின் பிரதான ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு பாடலை அடக்கியது என தன் போர்க்காலப் பாடல்களில் பக்தி இசை நெறியை வளர்த்ததை வர்ண ராமேஸ்வரன்
குறிப்பிட்டிருக்கிறார்.தனது உறவுகளை இறுதிவரை மனதின் நிறுத்தியவர் வர்ண ராமேஸ்வரன். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தன் தாயகம் மீதும், தன் மக்கள் மீதும் நேசம் கொண்ட கலைஞனாகவிளங்கினார். தனது இசை மேடைகளில் தமிழர்களின் வலிகளை, பாடுவது தான் தன்னுடைய காலத்தின் பணியென செயல்பட்டவர். அதற்கு கனடாவில் இசையரங்கத்தின்’இசைக்கு ஏது எல்லை’மேடை களம் அமைத்து கொடுத்தது.
கலைஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி. ஏற்கனவே எப்போதோ நடந்தயாருக்காகவோ
எழுதிய பாடல்களை எங்களின் இனம் அழிந்து கொண்டிருக்கும் போதும் பாடிக் கொண்டு இது தான் இசையென்பதை நான் ஏற்கமாட்டேன் என்றார் வர்ண ராமேஸ்வரன் . சமகாலத்தைப் பிரதிபலிக்காத எந்தக் கலையும், எந்தக் கலைஞனும் மக்கள் மனங்களிலே இடம்பெற்று வாழ முடியாது என்பதில் உறுதியாக இருந்தவர். கனடாவில் வர்ணம் என்னும் இசைப் பள்ளியினையும் நடாத்தி பல இளம் கலைஞர்களை உருவாக்கி வந்தவர். புலம்பெயர் சூழலில் பல ஈழத்து இளம் கலைஞர்கள் வெளிச்சம் பெற
வேண்டிக் குரல் கொடுத்தவர்.
“வேப்ப மரக்காற்றே நில்லு……..
வேலியோரப் பூவே சொல்லு…..”
என இடம் பெயர்ந்து துன்பப்பட்ட வேளையிலும் அந்த மக்களின் குரலாக வர்ண ராமேஸ்வரன் ஒலித்தார்.
‘மறந்து போகுமோ மண்ணின் வாசனை …….
தொலைந்து போகுமோ தூர தேசத்தில்…..’
என புலப்பெயர்வின் வலியாக ஒலித்தவரும் வர்ண ராமேஸ்வரன் தான்.
குறைந்தது இன்னும் மூன்று தசாப்தங்களாயின் தான் கொண்ட இசை மரபின் வழியே ஈழத்துச் சமூகத்தின் நாதமாக விளங்க வேண்டியவரின் இழப்பு பேரிழப்பே.
கானா பிரபா
வர்ண ராமேஸ்வரனுக்கான எமது நினைவஞ்சலி