நாடளாவிய ரீதியில் COVID பெருந்தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழர் சமூகத்தில் சமூக ஒன்று கூடல்கள் மீதான கட்டுப்பாடுகளை மீறும் தனியார் ஒன்று கூடல்களும், நிகழ்வுகளும் கடந்த சில வாரங்களில் வழக்கமாகிவருவது குறித்து ஏமாற்றமடைவதாக Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
COVID-19 குறித்த சமூக ஒன்றுகூடல்கள் தொடர்பான விதிகளைப் பின்பற்றுவது குறித்து காணொளி ஒன்றையும் அறிக்கை ஒன்றையும் அவர் இன்று (02) வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் காணொளி
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் அறிக்கை
October 2, 2020, Scarborough, Ontario
COVID-19, நவீன வரலாற்றில் முன்னொருபோதும் ஏற்படாத பெரும் பொதுச் சுகாதார நெருக்கடியாகத் தொடர்கிறது. மனிதரில் முன்னர் காணப்படாத இந்தப் புதிய வகை Virus காரணமாகக் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான கனடியர்கள் மரணமானார்கள். Virus பரவலின் இரண்டாவது அலை தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், மேலதிகமானோருக்கு நாம் உயிராபத்தை ஏற்படுத்த முடியாது. தனியொரு நாளில் அறிவிக்கப்பட்ட மிகப் பெரும் அளவாக 700க்கும் அதிகமானோருக்கு Virus தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், COVID-19 எங்கோ உள்ள ஒன்றல்ல, அது எமது சமூகத்தில் கலந்துள்ளதென்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
சமூக ஒன்று கூடல்கள் மீதான கட்டுப்பாடுகளை மீறும் தனியார் ஒன்று கூடல்களும், நிகழ்வுகளும் கடந்த சில வாரங்களில் வழக்கமாகிவிட்டதை அவதானிக்கும்போது எனக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. எமது சமூகத்தில் உள்ள மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பற்ற இந்த ஒன்றுகூடல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென நான் மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தடுப்பு மருந்து ஒன்று பயன்பாட்டுக்கு வரும் வரையில் அல்லது பொதுச் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தும் வரையில் பின்வரும் விதிகளைப் பின்பற்றுவது எம்மையும், ஏனையோரையும் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும்.
நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புவது:
● சமூக ஒன்றுகூடல்கள் குறித்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றுங்கள் – இன்றைய நிலையில்: உள்ளக ஒன்றுகூடல்களுக்குப் 10 பேர் என்ற கட்டுப்பாடும், வெளிப்புற ஒன்றுகூடல்களுக்கு 25 பேர் என்ற கட்டுப்பாடும் உள்ளன. (இந்த எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள் எந்தவேளையும் மாறலாமென்பதால் உங்கள் உள்ளுர் பொதுச் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்)
● இந்த வரையறைகளுக்கு உட்பட்டு ஒன்றுகூடும் சந்தர்ப்பங்களிலும் பரிந்துரை செய்யப்பட்ட சமூக இடைவெளியைப் (இரண்டு மீட்டர்) பின்பற்றுங்கள், அல்லது வாயையும் மூக்கையும் மூடும் சுவாசக் கவசம் ஒன்றைக் கட்டாயமாக அணியுங்கள்.
● உணவு, பானங்கள், அல்லது மதுபானங்களை ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம்.
● வீட்டு வளவுகளில் இடம்பெறும் Barbeque, பிறந்தநாள் விழாக்கள், வரவேற்பு விருந்துபசாரங்கள் மற்றும் ஏனைய வகையான ஒன்றுகூடல்களின்போது விருந்து வழங்கியாக இருந்தாலும், விருந்தினராக இருந்தாலும் பொதுச் சுகாதார பரிந்துரைகளை அனைத்து வேளையிலும் பின்பற்றுங்கள்.
இந்த விதிகளை நாம் தெரிந்துகொண்டே மீறும்போது, எமது நண்பர்கள், குடும்பத்தினர், அன்புக்குரியோர் ஆகியோருக்கு இந்த வைரஸைப் பரப்பும் அடிப்படையில் பிரச்சினையின் ஒரு பகுதியாக, அதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.
நல்ல நோக்கம் உள்ள நல்ல மனிதர்களும், சமூக ஒன்று கூடல்களிலும், நண்பர்களுடன் உள்ளபோதும் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கைவிடக்கூடுமென்பதை நான் அறிவேன். இத்தகைய சூழ்நிலைகள் எமக்குத் திருப்தி தந்தால், அல்லது அவையே வழமையாகிவிட்டால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை நாம் நிறுத்தி, ஏனையோருடன் மிகவும் நெருக்கமாகப் பழகுவதுடன், உணவு பானங்கள் போன்றவற்றைப் பகிர்வதுடன், முழு நேரமும் சுவாசக் கவசத்தை அணிவதைக் கைவிடுவது ஆகியவற்றையும் செய்யக்கூடும்.
கடந்த ஆறு மாதங்களும் எம் அனைவருக்கும் பிரச்சினையானவையாக இருந்தன – COVID-19 காரணமாக சகோதரர்கள், பெற்றோர், பேரப் பெற்றோர் உட்பட எமது அன்புக்குரிய பலரை நாம் இழந்தோம். கடந்த சில மாதங்களில் நாம் புரிந்த தியாகங்கள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பயனளித்தாலும். உயிர்களுக்கு ஆபத்து இருக்கும் வேளையில் கட்டுப்பாடுகளையோ, பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ நாம் தளர்த்த முடியாது.