கனடாவுக்கு எதிராக அமெரிக்கா வரிகளை அறிவித்தால், கனடா அதற்கு பதில் நடவடிக்கையை முன்னெடுக்கும் என பிரதமர் Justin Trudeau மீண்டும் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி வரிகளை விதிக்க எதிர்பார்க்கும் நிலையில், கனடிய பிரதமர் வர்த்தக நடவடிக்கைக்கு எதிரான தனது அரசாங்கத்தின் வாதங்களை முன்வைத்தார்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு February 1 முதல் வரி விதிக்கப்படும் என Donald Trump தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பதவியேற்பு உரையில் Donald Trump வாக்குறுதியளித்த “பொற்காலத்தை” நடைமுறைப்படுத்துவதற்கு கனடாவின் தேவை அமெரிக்காவுக்கு உள்ளது என Justin Trudeau நினைவுபடுத்தினார்.
Quebec மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் முடிவில் நிகழ்ந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தின் போது பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார்.
ஒரு செழிப்பான, பாதுகாப்பான வட அமெரிக்க பொருளாதாரத்தை உருவாக்க அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற கனடா தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா வரிகளை அறிவித்தால், கனடா மூன்று சுற்று பதிலடி நடவடிக்கையை திட்டமிட்டுள்ளது என கூறப்படும் நிலையில் “சாத்தியமான ஒவ்வொரு சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்,” என பிரதமர் கூறினார்.