Ontario மாகாண பாடசாலைகளின் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது.
2024-2025 கல்வி ஆண்டின் ஆரம்பமான September மாதம் முதல் இந்த தடை விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.
கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை விதிப்பதுடன் vaping பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் அறிமுகப்படுத்துகிறது.
Ontario மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce ஞாயிற்றுக்கிழமை (28) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசியின் பாவனை மாணவர்களின் கல்வியில் பெரும் கவனச்சிதறலை ஏற்படுத்துவதான பெற்றோர்கள், ஆசிரியர்கள் முறையீடுகள் அடிப்படையில் இந்த தடை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மழலையர் பாடசாலை முதல் 6 ஆம் ஆண்டு வரை உள்ள மாணவர்களுக்கு , கல்வியாளரால் அனுமதிக்க படாவிட்டால், நாள் முழுவதும் தமது தொலைபேசியின் பாவனை தடை செய்யப்படும்.
7 ஆம் ஆண்டு முதல் 12 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட மாணவர்களுக்கு வகுப்பு நேரத்தில் மட்டும் கையடக்க தொலைபேசியின் பாவனை தடை செய்யப்படும்.
இந்த விதிமுறைகளை மீறும் மாணவர்கள் தொலைபேசிகளை உடனடியாக கல்வியாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இந்த விதிமீறல் குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு அறிவிக்கப்படும்.
தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைநீக்கத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.
இந்த புதிய விதிமுறைகளின் ஒரு பகுதியாக, அனைத்து பாடசாலை சாதனங்களில் இருந்து சமூக ஊடக தளங்கள் தடை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.