Ontario மாகாணம் AstraZeneca தடுப்பூசியை பெறக்கூடியவர்களின் வயதெல்லையை 40 ஆகக் குறைக்கிறது.
AstraZeneca தடுப்பூசி செவ்வாய்கிழமை முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருந்தகங்களிலும் முதன்மை பராமரிப்பு நிலையங்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை சுகாதார அமைச்சர் Christine Elliottடின் அலுவலக பேச்சாளர் ஞாயிற்றுக்கிழமை மாலை உறுதிப்படுத்தினார். Ontarioவில் 1,400 மருந்தகங்களில் AstraZeneca தடுப்பூசிகள் கிடைக்கும் என மாகாணத்தின் COVID தடுப்பூசி விநியோக பணிக்குழு தெரிவித்தது.
Ontario மாகாணத்தில் COVID தொற்றின் மூன்றாவது அலையின் மத்தியில் தொற்றுகளின் எண்ணிக்கையும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது. NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து AstraZeneca தடுப்பூசி தற்போது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்றது.
AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் COVID தொற்றை பெறுவதற்கான அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக Health கனடா கூறியது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது. Health கனடாவின் அறிவுரையின் படி 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு வயதினருக்கும் AstraZeneca தடுப்பூசியை மாகாணங்களும் பிரதேசங்களும் பயன்படுத்தலாம் என மத்திய சுகாதார அமைச்சர் Patty Hajdu கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 4.8 மில்லியன் தடுப்பூசிகள் Ontario மாகாணத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3.8 மில்லியன் தடுப்பூசிகளை மாகாணம் இதுவரை பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் 395,000 மேலதிக தடுப்பூசிகள் Ontarioவிற்கு விநியோகிக்கப்படும் என அமைச்சர் Hajdu கூறினார்.