நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து பயணிப்போம்: கனேடிய நாடாளுமன்றத்தில் ஹரி ஆனந்தசங்கரியின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு உரை ;-
நீதியை நோக்கிய பயணம் நீண்டதாகவும், வேதனையானதாகவும் இருந்தாலும், நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து பயணிப்போம் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 வது ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்ந்து திங்கட்கிழமை நாடாளுமன்ற அமர்வில் ஹரி ஆனந்தசங்கரி உரையாற்றினார்.
நினைவு கூர்வதற்கான உரிமைகூட கவலைக்குரிய வகையில் தற்போது தாக்குதலுக்குள்ளாகி உள்ளது என தனது உரையில் Scarborough Rouge தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசு நினைவுச் சின்னங்களை அவமதிப்பதும், நினைவேந்தல் புரிவோரை அச்சுறுவதும் தொடர்ந்து வருவதையும் ஹரி ஆனந்தசங்கரி தனது உரையில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் உரை முழுமையாக:
சபாநாயகர் அவர்களே, கனடாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், மே 18 ஆந் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு நாளைக் கடைப்பிடிக்கிறார்கள்.
அவர்கள் துக்கம் கடைப்பிடித்து, துயருறுவதுடன், இத்தகைய இனப்படுகொலையையும், அட்டூழியத்தையும் இந்த உலகில் மீண்டும் அனுமதிக்கப்போதிவல்லையென உறுதிபூணுவார்கள்.
ஆனால், நினைவுகூர்வதற்கான உரிமைகூடக் கவலைக்குரிய வகையில் தற்போது தாக்குதலுக்குள்ளாகி உள்ளது.
இலங்கை அரசு நினைவுச் சின்னங்களை அவமதிப்பதும், நினைவேந்தல் புரிவோரை அச்சுறுவதும் தொடர்ந்துவருகிறது.
இலங்கைத் தீவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், இந்தக் கட்டுப்பாடுகளின் மத்தியிலும், மே 18 ஆம் திகதி நேரடியாகவோ, மெய்நிகர் முறையிலோ கரங்கோர்த்து மரணமான எமது சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், தமிழர்கள் சுதந்திரம், சமத்துவம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன் இலங்கைத் தீவில் வாழ்வதை உறுதி செய்வதற்கு மீள உறுதிபூணுவார்கள்.
நாம் எதையும் தாங்கிக்கொள்வோம். எம்மை ஒருபோதும் மௌனமாக்க முடியாது. மறைந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் எமது கூட்டு நினைவிலும், எமது இதயங்களிலும் அமைந்துள்ளன. நீதியை நோக்கிய பயணம் நீண்டதாகவும், வேதனையானதாகவும் இருந்தாலும், நீதி கிடைக்கும் வரை நாம் அதைத் தொடர்வோம் என தெரிவித்துள்ளார்.